உலகம் எங்கே செல்கின்றது? உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நாம் சரியாக அதை அதுவாகவே அறிந்துள்ளோமா? அல்லது யார் என்ன செய்கின்றார்கள், ஏன் செய்கின்றார்கள், எப்படி செய்கின்றார்கள், என்பதை அறிந்துள் ளோமா? உலகம் இருக்கும் இன்றைய நிலைமையில் இத்தனை விஷய ங்களை, செய்திகளை, சம்பவங்களை நாம் உள்வாங்கிக் கொள்வது எமக்குத் தேவைதானா? நாம் வாழும் இவ்வுலகம் ஒவ் வொரு வினாடியும் நம் வாழ்க்கையில், சிந்தனையில், மனோ நிலை யில் பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது எவ்வளவு தூரம் நம்மால் நம்மிலும் இவ்வுலகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
இன்று உலகில் உள்ள எல்லோருமே ஏதோ ஒருவகையில் மறைமுகமாக குருடர்களாகவும், செவிடர்களாகவும், நொண்டியாகவும், மூடர்களாகவும் வாழ்கின் றார்கள். எத்தனை கேள்விகள் ஒன்றுக்குமே அவர்களால் சரியாக பதிலளிக்க முடி யவில்லை. எத்தனை ஆதங்கங்கள் ஒருவராலுமே அவர்களுக்கு முழு ஆறுதல் தரமுடியவில்லை. அமைதி வேண்டும், அன்பு வேண்டும், மகிழ்ச்சி வேண்டும், செழிப்பு வேண்டும் என்று எவ்வளவு யாசிக்கின்றார்கள்.
நாம் ஏன் பிறந்தோம்? கவலைப்படவா? துன்பப்படவா? வேதனைப்படவா? நாம் ஏன் கடன்பட்டிருக்கிறோம்? பணம், உறவு, பாசம், செயல் என்று எத்தனை பேருக்கு நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்? இந்த வாழ்க்கையில் எத்தனை பித்தலாட்டங்கள். சண்டைகள், சச்சரவுகள், துன்புறுத்தல்கள், கொடுமைகள், மனஸ்தாபகங்கள், கைகல ப்புகள், காயப்படுத்தல்கள், கொலைகள் என மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நடந்து கொண்டேயிருக்கின்றன. எத்தனை உரசல்கள், எத்தனை வெறுப்புகள், எத்தனை வருத்தங்கள்? இவற்றிலிருந்து எப்போ விடுதலை? யார் நமக்கு வழிகாட்டி? யார் நம்மைக் காப்பாற்றுவார்? யாருக்கு அக்கறை உள்ளது?
இன்றைய உலகின் அதிகாரம் மூன்று வகையான வர்க்கத்தில் தங்கியிருக்கி ன்றது. முதலாவது சமயத் தலைவர்கள். மனிதர்களின் வாழ்க்கை முறையை நிர்ணயிப்பதும், அவர்களின் பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புக்களில் ஆதிக்கம் செலுத்துவதும், கருத்துக்கள் கொள்கைகளில் தாக்கத்தை உருவாக்குவதும், இனங்கள், பிரிவுகளுக்கு அடையாளம் கொடுப்பதிலும் சமயத் தலைவர்களின் அதிகாரம் மறுக்கப் பட முடியாதது.
இவ்வுலக அதிகாரத்தை தம் வசம் வைத்திருக்கும் அடுத்த வர்க்கத்தினர் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள். மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், என்ன முயற்சி செய்ய வேண்டும், என்ன வசதிகளைக் கொண்டிருக்கலாம் என்ன வர்த்தகம் செய்யலாம், எவ்வளவு இலாபத்தைப் பெறலாம், என்ன சட்டங்கள் இயற்றலாம், என்ன தண்டனைகள் கொடுக்கலாம், யாருக்கு உதவலாம், என்னென்ன சேவைகளைப் பெறலாம் என்பதெல்லாம் இவர்கள் கொடுக்கும் வரைவிலக்கணத்தின் படியே நடைபெறும்.
இவ்வுலகத்தில் ஆதிக்கத்தை உருவாக்கும் அடுத்த வர்க்கத்தினர் பௌதீக உலகின் விதியை அறிந்து கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள். புதுமைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வசதிகளைப் பெருக்கும் சாதனங்கள், நேரத்தை மிச்சமாக்கும் சாதனங்கள், சொகுசுகளை அதிகரிக்கும் சாதனங்கள். தூரத்தைக் குறைக்கும் சாதனங்கள், மற்றும் அழிவுக்கான சாதனங்கள் என எல்லாக் கருவி களையும் உருவாக்கி அதன் வரலாற்றையே மாற்றி மனிதர்களின் மேல் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றார்கள்.
இவ்வுலகம் சந்தோசமான, உன்னதமான மாற்றத்தை உருவாக்க வேண்டு மாயின் இந்த அதிகார வர்க்கத்தினரே அந்த மாற்றத்தையும் உருவாக்க வேண்டும். அந்த மாற்றம் உருவாகுவதற்கு தேவை என்னவென்றால் ஆன்மீகம். ஆன்மீகம் என்பது நினைப்புகள் தூய்மையாகவும் வார்த்தைகள் இனிமையாகவும், செயல்கள் சிரேஷ்டமாகவும் அமைய நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே. சமயத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், விஞ்ஞானிகளும் தத்தம் வாழ்க்கையை ஆன்மீகத்தின் படி அமைத்துக் கொண்டால் அவர்களின் படைப்புகளும் திட்டங்களும், கொள்கைகளும் யாருக்கும் பாதகமாகவோ, வேதனையாகவோ அல்லது எதிராகவோ அமைய சந்தர்ப்பம் இல்லை. ஒருவன் ஆன்மீக வாழ்வு வாழும் பொழுது ஆணவம், கோபம், பேராசை, பற்று, காமம் நம்மில் தலை தூக்காது. அன்பு, அமைதி, பேரின்பம், சக்தி, தூய்மை நமக்கு வழிகாட்டும். இறைவன் நம் தொடர்பில் இருப்பான்.
ஆன்மீக வாழ்க்கையே நாம் தேடிக்கொள்ளும் விடுதலை. ஆன்மீக வாழ்க்கையே உன்னத வாழ்க்கையின் இரகசியம். ஆன்மீக வாழ்வு வாழ்பவனுக்கு இவ்வுலக சம்பவங்கள் பாதிக்காமல் இருக்கும், என்ன நடந்தாலும் துன்பம் இருக்காது. உலகத்தில் மாற்றத்தை உருவாக்க நாம் இவ்வுலகை மறக்க வேண்டும். வேதனைகளை கவலைகளை மறக்க வேண்டும். கேடுகள் கொடுமைகள் மனஷ்தாபகங்களை மன்னிக்க வேண்டும். என்னை, நான் செய்த காரியங்களை, மற்றவர்களை அவர்களின் செய்த செயல்களை மன்னிக்க வேண்டும். மொத்தத்தில் கடந்த காலத்தை மறக்க வேண்டும் மன்னிக்க வேண்டும். நான் ஒரு புதிய மனிதனாக, கடவுளின் குழந்தையாக வாழப் பழக வேண்டும்.
ஆன்மீகமே உலகத்தை உய்விக்கும். சமயம், அரசியல், விஞ்ஞானம் என்பன ஆன்மீக ரீதியாக ஆதிக்கம் செலுத்தினால், துன்பம், அறியாமை, சுயநலம் இல்லாத தெளிவான, இன்பமான, அறிவுபூர்வமான ஒரு உலகத்தை நாம் ரசிக்கலாம். இன்றைய உலகம் சீர்கெட்ட நிலைக்குக் காரணம் ஆன்மீகம் இல்லாததால். ஆகவே உன்னை அறிந்து உலகத்தை முன்னேற்று.